தமிழ்குடி ஒற்றுமையே!

தமிழனத்தின் விடுதலை!

வரலாற்று பதிவுகள்

ம. செந்தமிழன் எனும் மருத்துவன்!

ம. செந்தமிழன் எனும் மருத்துவன்!

தமிழரினம் உச்சிமுகர்ந்துக் கொண்டாட வேண்டிய சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அந்த வரிசையில் முதலாவதாக ஐயா ம.செந்தமிழன் அவர்களைப் பற்றி இன்று அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நான் அவரை அறிமுகப்படுத்துவது என்பதே அபத்தம் என்பதை அறிவேன் என்றாலும், அவரை இதுவரையும் பின்தொடராது இருப்பவர்களுக்காகவே இப்பதிவு.

தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் நமக்கெல்லாம் ஆகச்சிறந்த வழிகாட்டியாக நிற்கும் பெருமதிப்பிற்குரிய ஐயா பெ. மணியரசன் அவர்களின் மகன் தான் ஐயா செந்தமிழன்.

தமிழர்கள் தங்களின் மரபு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். எழுத்து, பேச்சு, செயற்களம் என்ற மூன்று தளத்திலும் தனக்கென ஒரு பெரும் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். குறிப்பாக இவர் எழுதிய 'ஆயிரம் சூரியன், ஆயிரம் சந்திரன் ஒரேவொரு பூமி' என்ற புத்தகம் எல்லாராலும் கொண்டாடப்பட்டது.

இவரது செம்மைவனத்திற்கு ஒருமுறை நம் உறவுகளோடுச் சென்று கலந்து கொண்டேன். அவரிடம் அன்று ஒரு அற்புதமான இயல்பை கண்டேன். அதாவது எளிமையும் தமிழனும் வேறுவேறு அல்ல என்பதே அந்த இயல்பு. இது மிகைச் சொல்லாடல் என்று நீங்கள் கருதினால், அவரை சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது இதை நீங்களும் உணர்வீர்கள். இவர் 'பாலை' என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து இவரைப் பற்றி சொல்வதற்கு வேறுசில செய்திகள் உள்ளன.

மனித உடலை அணு அணுவாக உடைத்து, தமிழரின் மரபார்ந்த சிந்தனை வழியாக அதன் இயக்கங்களை விளக்குவதில் தலைச்சிறந்த மேதையாக உருவாகி நிற்கிறார். 'அண்டத்தில் உள்ளதே, பிண்டத்தில் உள்ளது' என்ற கருத்தை ஆணித்தரமாக நம்புகின்றார். அதனை நிறுவுவதற்காக அவர் கொடுக்கும் விளக்கங்கள் மெய் சிலிர்க்க வைப்பவை.

இவரைக் குறைவாக மதிப்பிட்டு கேலி பேசியவர்களும் உண்டு. ஆனால், அவர் உண்மையில் உடலின் அறிவியலைத்தான் மரபுவழி மருத்துவம் என்ற பெயரில் வெளிப்படுத்துகிறார் என்பதை என்னால் உணர முடிகிறது.

ஐம்பூதங்களின் தொகுப்பே மனிதன். ஐம்பூதங்களில் சமநிலைக் குழையும் போதுதான் பேரிடர் உண்டாகும் என்ற இவரது மெய்யியல் வழிப்பட்ட விளக்கங்கள் காலம் கடந்தும் நம்மை வழிநடத்தும்.

எடுத்துக்காட்டாக, இவர் பல ஆண்டுகளாக காற்று ஊழிக்காலம் நடப்பதாகவே சொல்லி வந்தார். அது என்ன காற்று ஊழிக்காலம்?

"காற்று சமநிலை தவறிவிட்டது. இனி காற்றின் வழியாகவே நோய் பரவும்" என்று தொடர்ந்து சொல்லி வந்தார். இன்று அது நிரூபணமாகி நிற்கிறது.

அவரது வரிகளையோ, அவரது கருத்துகளையோ உங்களுக்கு அப்படியே கடத்துவது என் நோக்கமல்ல. அப்படிக் கடத்த முற்படுவதும் பிழையாகிப்போக வாய்ப்புண்டு. ஆனால், அவரைத் தமிழ்த்தேசியவாதிகள் கட்டாயம் பின்தொடர வேண்டும் என்பதே என் கருத்து. ஏனெனில், அவரது கருத்துகளை அவரே சொல்வதை கேட்பதும், அவரது நடையிலேயே நீங்கள் படிப்பதும்தான் மிகச் சரியாக இருக்குமென நம்புகிறேன்.

இந்த இக்கட்டான சூழலில் கூட நம்மைப் பக்குவப்படுத்தும் பொருட்டும், நம் சிந்தனையை சீர்படுத்துவதற்கும், நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதற்கும் தேவையான கருத்துகளை உள்ளடக்கிய ஒலிப்பதிவுகளை தன் 'செம்மை மரபுப்பள்ளி' என்ற யூ டியூப் வலைதளத்தில் பதிவேற்றி உள்ளார். அதுமட்டுமல்ல தொடர்ந்து பல நூறு பதிவுகள் அதில் கொட்டிக் கிடக்கின்றன. அவை அனைத்துமே பொக்கிசங்கள்.

அடுத்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் உறுதியாக கேட்டுப் பயனடைய வேண்டும். அதுமட்டுமல்ல, ஐயா செந்தமிழன் சொல்கின்ற அனைத்தையும், இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கு நாம் கட்டாயம் கடத்தியாக வேண்டும். இது நம் வரலாற்றுக் கடமை. ஓய்வு நேரங்களில் நம் பிள்ளைகள் அவரது மரபுப்பள்ளியின் வகுப்புகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நாம் மறந்துவிட்ட, காலப்போக்கில் அழித்துவிட்ட அனைத்தையும் மீட்கத் துடிக்கும் ஒரு பேராசானைப் பயன்படுத்திக் கொள்வது நம் கடமை. அவர் நம்மைத் தேடி வரமாட்டார். நாம்தான் அவரைத் தேடி, அவரது ஒலிப் பதிவுகளைத் தேடி, அவரது புத்தகங்களைத் தேடி ஓட வேண்டும்.

தமிழன் எல்லாத் தளங்களிலும் மீள் எழுச்சிக் கொள்கின்ற காலம் இது. இந்த யுகமே உண்மைகள் வெளிப்படும் யுகம்தான். மரபார்ந்த நம் உணவு மற்றும் மருத்துவ அறிவைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் உடைத்துச் சொல்லும் ஐயா ம. செந்தமிழன் நமக்கு ஒரு வரம்.

4015994917271213072640.jpg

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

பிரபலமானவை